அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் 5 பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக்குற்றச்சாட்டு!!
அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் கறுப்பின இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 வயதான டயர் நிக்கலஸ் எனும் கறுப்பின இளைஞரே உயிரிழந்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 அதிகாரிகளும் கறுப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
டென்னஸி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் கடந்த 7 ஆம் திகதி வாகனமொன்றை டயர் நிக்கலஸ் செலுத்திவந்தபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஒழுங்கீனமான முறையில் வாகனம் செலுத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன்பின் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கடந்த 10 ஆம் திகதி நிக்கலஸ் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து பொலிஸ் அதிகாரிகள் ஐவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், மேற்படி 5 பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக நேற்று கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020 மே மாதம் ஜோர்ஜ் புளோய்ட் எனும் கறுப்பின இளைஞர், வெள்ளையின பொலிஸ் அதிகாரியினால் முழங்காலில் மிதித்து கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்காவின் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததுடன் வன்முறைகளும் இடம்பெற்றிருந்தன.
இதேவேளை, டயர் நிக்கலஸ் கைது செய்யப்பட்டபோது பதிவான வீடியோவை உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (27) மாலை வெளியிடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வீடியோ வெளியிடப்பட்ட பின்னர் மக்கள் ஆத்திரமடையலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், மக்கள் அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் கோரியுள்ளார். அமைதியான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.