ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அஸர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் உயிரிழந்தார் எனவும் மேலும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர் எனவும் தெஹ்ரான் நகர பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் தனிப்பட்ட காரணங்களால் நடந்துள்ளது என ஈரானிய வெளிவிகார அமைச்;சு தெரிவித்துள்ளது.
இம்சம்பவத்தையடுத்து தூதரகத்தில் உள்ளவர்களை அஸர்பைஜான் வெளியேற்றியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஓர் ஈரானியர். அஸர்பைஜான் பெண்ணொருவரை அவர் திருமணம் செய்துள்ளார் என தெஹ்ரான் பொலிஸ் தலைவர் ஜெனரல் ஹொசைன் ரஹிமி கூறியுள்ளார்.
தனது மனைவி 9 மாதங்களாக மேற்படி தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நபர் கூறினார் எனவும் ரஹிமி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் சிறார்களான தனது இரு பிள்ளைகளுடன் தூதரகத்துக்குள் நுழைந்து, துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என ஜெனரல் ஹொசைன் ரஹிமி கூறியுள்ளார்.
இம்சம்பவத்தையடுத்து தூதரகத்தில் உள்ளவர்களை அஸர்பைஜான் வெளியேற்ற ஆரம்பித்துள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பு எனவும் அஸர்பைஜான் கூறியுள்ளது.