அதிகரித்த அகதிதஞ்சம் – ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எடுத்த இறுக்கமான முடிவு !!
ஐரோப்பாவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு மீண்டும் திருப்பியனுப்பும் நகர்வுளை துரிதப்படுத்த ஐரோப்பிய உள்துறை அமைச்சர்கள் உடன்பாடு கண்டுள்ளனர்.
இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்காத நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளுக்குரிய நுழைவிசைவு விதிகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இந்தக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அகதிதஞ்சம் கோருவோரின் தொகை மிக அதிகரித்துவருகிறது. உதாரணமாக பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிகளவான அகதிதஞ்ச கோரிக்கைள் முன்வைக்கப்பட்டள்ளன.
பிரான்ஸில் கடந்தவருடம் மட்டும் 1 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமான அகதி தஞ்சகோரிக்கை விண்ணப்பங்கள் குவிந்திருந்தன.
இது 2021 ஐ விட 16.5 வீதம் அதிகமாக உள்ள நிலையில், ஐரோப்பாவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களைத் மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவது மிகவும் சவாலான பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த சவாலான நிலையை மாற்றுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் நேற்று சுவீடன் தலைநகர் ஸ்ரொக்ஹோமில் கூடி, பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களின் முடிவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நகர்வை துரிதப்படுத்துவது என உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் ஒத்துழைக்காத நாடுகளின் குடிமக்களுக்கு நுழைவிசைவுகளை வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவரவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து திருப்பியனுப்படவேண்டிய 340,500 பேரில் 21 சதவீதமானோரே அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பட்டதாக ஐரோப்பிய ஆணையகத்தின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் மறுக்கப்பட்ட தமது குடிமக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் சிறப்புத்திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளித்துவருவது குறிப்பிடத்தக்கது.