;
Athirady Tamil News

கல்வியறிவு இல்லாதவருக்கு மனநலம் பாதிக்க வாய்ப்பு: இங்கிலாந்தில் ஆய்வறிக்கை வெளியீடு!!

0

‘கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மன அழுத்தம், தனிமை மற்றும் பதட்டம் போன்ற மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என இந்தியா உட்பட 9 நாடுகளில் இங்கிலாந்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக கல்வியறிவு, மனநலம் இரண்டையும் தொடர்புபடுத்தி இங்கிலாந்தின் ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், ‘மென்டல் ஹெல்த் அண்ட் சோஷியல் இன்குளுசன்’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இந்தியா, அமெரிக்கா, சீனா, நேபாளம், தாய்லாந்து, ஈரான், கானா, பாகிஸ்தான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் சுமார் 20 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 19 ஆய்வுகளில் நடத்தப்பட்ட விவரங்களை தொகுதி, ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 50 ஆண்டுகளாக படிப்பறிவு பெற்றவர்கள் விகிதம் அதிகரித்து வந்தாலும் கூட, தற்போதும் உலகளவில் 77.3 கோடி பேர் எழுதப்படிக்க தெரியாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் படிப்பறிவு விகிதம் குறைவாக காணப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களாக உள்ளனர். நன்கு படித்தவர்கள் நல்ல சம்பளம், வளமான வாழ்க்கை, சுகாதாரமான உணவு, வசதியான வீடு என சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளனர்.

இதுவே எழுதப்படிக்க தெரியாதவர்கள் வறுமையில் சிக்கி, அதன் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு மோசமான உடல்நலம், நாள்பட்ட நோய், குறைவான வாழ்நாள் ஆகியவற்றுடன் தொடர்பு இருக்கிறது. எனவே அவர்களுக்கு மனஅழுத்தம், பதற்றம் மற்றும் தனிமை போன்ற மனநல பாதிப்புக்கும் வாய்ப்புகள் அதிகம். மோசமான மனநிலைக்கு முழு காரணம் படிப்பறிவின்மை என்று கூற முடியாது. ஆனாலும், இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.