அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது ; உள்ளூராட்சி தேர்தல் மார்ச்சில் நிச்சயம் இடம்பெறும் – ஜி.எல்.பீரிஸ்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது. வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் மக்களின் அடிப்பமை உரிமையை முடக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நிச்சயம் இடம்பெறும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மக்களாணைக்கு பயந்து தேர்தலை பிற்போட இந்தளவு சூழ்ச்சிகள் செய்த அரசு உலகில் வேறெங்கும் இல்லை.மக்கள் மத்தியில் செல்ல முடியாத அவல நிலையை அரசாங்கமும்,அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் கட்சிகளும் எதிர்கொண்டுள்ளன.தேர்தல் தொடர்பில் பொய்யான செய்திகளை மாத்திரம் வெளியிடுவதை அரசாங்கம் பிரதான செயற்பாடாக கொண்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அரசாங்கம் பொய்யான செய்திகளை திட்டமிட்ட வகையில் வெளியிடுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அவர் பதவி விலகியிருந்தால் அது எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த ஒரு தடையாக அமையாது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் ஆரம்பக்கட்ட அனைத்து பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. தீர்மானங்களை செயற்படுத்தும் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. ஆகவே மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.தேர்தலை பிற்போடும் முயற்சியில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது.
ஒட்டுமொத்த மக்களாலும் வெறுக்கப்படும் அரசாங்கமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு பலமாக உள்ளது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. பாதாள குழுவின் செயற்பாடு,மனித படுகொலைகள் பகிரங்கமாகவே இடம்பெறுகிறது.அரசாங்கம் நாட்டை ஆள்கிறதா,அல்லது பாதாள குழு நாட்டை ஆள்கிறதா என்று எண்ண தோன்றுகிறது.
போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாத்த நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொது மக்களின் துயரத்தை அரசாங்கம் கண்டுக் கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் புதிய வரி சீர்த்திருத்தங்களினால் அனைத்து தொழிற்துறையினரும் அரசாங்கத்திற்கு எதிராக போர் கொடி உயர்த்தியுள்ளார்கள். அரசாங்கத்தின் அனைத்து தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும் மக்கள் ஜனநாயக ரீதியில் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.