நியூசிலாந்தில் தொடர் கனமழை- வெள்ளப்பெருக்கு: 3 பேர் பலி!!
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக ஆக்லாந்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் பெய்யும் மொத்த மழை அளவில் 15 மணி நேரத்தில் மட்டும் 75 சதவீதம் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் அந்நகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆக்லாந்து விமான நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கி குட்டி தீவு போல் காட்சியளித்தது. விமான நிலைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் மேல்தளத்திற்கு சென்று பணியாற்றுகின்றனர். எஸ்கலேட்டர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டன. இதனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
படையினருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர கால தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்லாந்தில் வெள்ள பாதிப்புகளை பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆய்வு செய்தார். இதன்பின்பு, அவசரகால படையினருடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘பருவகால மழையால் ஏற்பட்டு உள்ள உயிரிழப்பு அதன் பாதிப்பின் தீவிர தன்மையை எடுத்து காட்டியுள்ளது. தொடர் கனமழைக்கு 3 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவரை காணவில்லை’ என்று கூறியுள்ளார்.