என்சிசி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு- 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்!!
டெல்லி, கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற என்.சி.சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.சி.சி அணிவகுப்பை பார்வையிட்டதுடன், என்.சி.சி.-ன் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
கடந்த 75 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்த என்சிசி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியை பிரதமர் பாராட்டினார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவின் நேரம் வந்துவிட்டது. இன்று உலகின் பார்வை நம் நாட்டை நோக்கி இருக்கிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் இந்தியாவின் இளைஞர்கள்தான்.
கடந்த 8 ஆண்டுகளில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் நமது பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் பேசினார்.