தேர்தலை இலக்காகக் கொண்டே 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி கூறுகின்றார் – சன்ன ஜயசுமண!!
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது.
அவர் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளாரே தவிர , தமிழ் மக்கள் மீது கொண்ட இரக்கத்தினாலல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
உண்பதற்கு உணவின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்காக 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பகுதி என்பதால் அதனை நடைமுறைப்படுத்துவது தனது கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திருத்தம் 1987 இல் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்றிலிருந்து ஆட்சியமைத்த 7 நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளில் எவரும் இதில் கைவைக்கவில்லை.
இதில் பிரச்சினை காணப்படுவதனாலேயே எவரும் அதனை செய்யவில்லை. ஜனநாயகத்திற்கு விரோதமாகவே ஜே.ஆர்.ஜயவர்தன இதனை நடைமுறைப்படுத்தினார்.
மக்கள் உண்பதற்கு உணவின்றி தவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் , உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்தி, பொதுத் தேர்தலும் இன்றி அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்காகவே அவர் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
மாறாக தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள இரக்கத்தினால் அல்ல. இறுதியாக தமிழ் மக்களையும் , சிங்கள மக்களையும் ஏமாற்றுவதற்காகவே அவர் இவ்வாறு செயற்படுகின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் அநாவசிய பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். முன்னாள் ஜனாதிபதிகளாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை அருகில் வைத்துக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கூறும் அனைத்திற்கும் தலையசைத்துக் கொண்டிருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷ புத்தி சுயாதீனத்துடன் இருந்தால் இதற்கு இணக்கம் தெரிவித்திருக்கமாட்டார். வயோதிபமடைந்துள்ள அவர் பயங்கரவாதத்தை தோற்கடித்து பெற்றுக் கொண்ட கௌரவத்தைக் கூட இழக்கும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
மக்கள் ஆணையற்ற பெயரளவிலான ஜனாதிபதிக்கு இவ்வாறான பாரதூரமான முடிவுகளை எடுக்கக் கூடிய உரிமை இல்லை. தேர்தல் மூலம் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அவரால் இதனை செய்ய முடியும். மாறாக தற்போது அவரால் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றார்.