சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன- ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு!!
கொவிட் – 19 வைரஸ் பரவலானது சர்வதேச ரீதியில் மிகமோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தோற்றுவித்ததுடன், அதன் தாக்கங்கள் தற்போதும் தொடர்கின்றன.
அந்தவகையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் தீவிர சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் பல வணிகங்களை மூடவேண்டிய நிலையேற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
கொவிட் – 19 வைரஸ் பரவலின் பின்னர் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் முகங்கொடுத்திருக்கும் பொருளாதார சவால்கள் தொடர்பில் மார்கா நிலையத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகளை உள்ளடக்கிய 42 பக்க அறிக்கை வெள்ளிக்கிழமை (27) வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
கொவிட் – 19 வைரஸ் பரவலானது சர்வதேச ரீதியில் மிகமோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தோற்றுவித்ததுடன், அதன் தாக்கங்கள் தற்போதும் தொடர்கின்றன.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் தீவிர சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றன.
கடந்த இருவருடகாலத்தில் உலகளாவிய ரீதியில் வணிக நடவடிக்கைகளின் போக்கு பெருமளவிற்கு மாற்றமடைந்துள்ளது. சுகாதார நெருக்கடியின் விளைவாக விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், உலகசந்தையை அணுகல் மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள், வங்கி கொடுக்கல், வாங்கல் கட்டுப்பாடுகள் போன்றவற்றின் காரணமாக நாட்டில் இயங்கும் அனைத்து வணிகங்களும் பொருளாதார ரீதியான தளம்பல் நிலைக்கு உள்ளாகின.
இவ்வாறானதொரு பின்னணியில் தமது வணிகங்கள் தொடர்பில் நேர்மறையான எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடியவாறான பல்வேறு நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிக முயற்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும் முழுமையாக நோக்குமிடத்து உற்பத்தி மற்றும் சேவைத்துறைசார் வணிகங்களால் முன்னெடுக்கப்பட்ட ‘பொறுப்புவாய்ந்த வணிக நடவடிக்கைகளுடன்’ ஒப்பிடுகையில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த வணிக முயற்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பொறுப்புவாய்ந்த வணிக நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவகையில் அமைந்தன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.