தேர்தல் இடம்பெறுமா ? இல்லையா ? என்பதை இறைவன் மாத்திரமே அறிவார் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!!
தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்பது தற்போதும் நிச்சயமற்ற நிலைமையிலேயே உள்ளது. அதனை இறைவன் மாத்திரமே அறிவார்.
வேட்பாளர்கள் தமது பணத்தை செலவிட முன்னர் உண்மையில் தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (27) மாலை கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றது.
மத்திய குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கை சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளிலும் , கூட்டணியாக போட்டியிடும் தொகுதிகளிலும் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் மத்திய குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விரைவில் மாவட்ட மட்டத்தில் எமது கூட்டங்கள் ஆரம்பமாகும். அதற்கமைய கம்பஹாவில் எமது முதலாவது கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹெகொப்டர் சின்னத்திலான கூட்டணியில் எவ்வித பிளவுகளையும் ஏற்படுத்திக் கொள்ள நாம் விரும்பவில்லை. எனவே கூட்டணியாக போட்டியிடும் தொகுதிகளில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம்.
இந்த அரசாங்கம் தேர்தலை நடத்துமா இல்லையா என்பதை அந்தக் கடவுள் மாத்திரமே அறிவார். காரணம் அரசாங்கம் ஆரம்பம் முதலே தேர்தலை நடத்துவதற்கான நிதி இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறது.
இதற்கு மத்தியில் தற்போது ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளார். மின் துண்டிப்பை நிறுத்த முடியாது என்று கூறுகின்றனர். இவ்வாறு வெ வ்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நாம் முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றோம்.
எனவே உண்மையில் தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்பதை அரசாங்கம் விரைவில் அறிவிக்க வேண்டும். காரணம் வேட்பாளர் தமது பணத்தை செலவிட முன்னர் அவர்களுக்கு தீர்க்கமான முடிவொன்று வழங்கப்பட வேண்டும். தற்போதும் தேர்தல் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது. விரைவில் இது நிச்சயமான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.