டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி!!
பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
நிதிப்பாற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது. ஆனால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடன் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் வரவுள்ளனர். இந்த சூழலில் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு டாலரின் மதிப்பு பாகிஸ்தான் ரூபாயில் 262 ஆக சரிந்தது.