கென்சவேட்டிவ் கட்சிக்குள் புதிய உற்று நோக்கல் – பிரதமர் சுனக்கின் இறுக்கமான முடிவு !!
பிரித்தானிய அரசாங்கத்தில் இருந்து நதீம் சஹாவியை பிரதமர் ரிஷி சுனக் நீக்கியுள்ளமை ஆளும் கென்சவேட்டிவ் கட்சி தொடர்பான உற்று நோக்கலை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
வரி விவகாரங்களை கையாண்டமை தொடர்பில் ரிஷி சுனக்கின் நெறிமுறைகள் ஆலோசகரின் விசாரணையின் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நதீம் சஹாவி, அமைச்சர் பொறுப்புக்குரிய விதிமுறைகளை மிகவும் தீவிரமாக மீறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக செயற்பட்ட காலப் பகுதியில் முன்னர் செலுத்தாத வரிக்கு அபராதம் செலுத்தியதை அடுத்து நதீம் சஹாவிக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ளுமாறு சேர் லோறி மெக்னஸ்சிடம் பிரதமர் கோரியிருந்தார்.
இந்த விசாரணையின் முடிவில் நதீம் ஷஹாவி, தனது நிதி குறித்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தவறியுள்ளதாக சேர் லோறி மெக்னஸ், தனது விசாணையில் கண்டறிந்துள்ளார்.
இந்த விசாரணை முடிவின் அடிப்படையில் தனது மாட்சிமை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதற்கான முடிவை தாம் மேற்கொண்டதாக அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த நதீம் சஹாவி, அரசாங்கத்தில் இருந்த போது தாம் செய்த சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஆண்டுகளில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு, பிரதமர் ரிஷி சுனக்கை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.