பட்ஜெட் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியதா? – மத்திய அரசின் தரவுகள் என்ன சொல்கின்றன?
இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசு 2024ஆம் ஆண்டு தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாகத் தனது கடைசி முழு பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறது.
ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ தரவுகளை அலசினோம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2022 பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி “9.2% என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து பெரிய பொருளாதாரங்களிலும் மிக அதிகம்” என்று கூறினார்.
ஆனால், யுக்ரேனில் போர் தொடங்கிய பிறகு உலகளாவிய மந்தநிலை, எரிபொருள் விலை உயர்வது குறித்த அச்சத்துடன், அந்த ஆண்டிற்கான வளர்ச்சிக் கணிப்பு கடந்த டிசம்பரில் 6.8% ஆக ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்டது.
அந்தத் திருத்தப்பட்ட குறைந்த வளர்ச்சி மதிப்பீட்டில்கூட, உலகளவில் ஏழு பெரிய வளர்ந்து வரும், வளரும் பொருளாதாரங்களில் இந்தியா “வேகமாக வளரும் பொருளாதாரமாக” இருக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது.
புள்ளியியல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி நிதியாண்டின் முதல் காலாண்டில் 13.5% ஆக இருந்தது. ஆனால், இரண்டாவது காலாண்டில் 6.3% ஆகக் குறைந்துள்ளது. ஏனெனில் மூலப் பொருட்களின் அதிக விலை மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக உற்பத்தித் துறை மந்தமானது.
ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, அதன் நிதிப் பற்றாக்குறை இலக்கு, மொத்த செலவினத்திற்கும் வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆக வைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்தது.
2020, 2021ஆம் ஆண்டில் 9.1%, 6.7% என்று இருந்ததைவிடக் குறைவாக இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதிகள் மீதான கோவிட் தொடர்பான கோரிக்கைகள் தளர்த்தப்பட்டன.
இருப்பினும், செலவினத்தை 39.45 டிரில்லியன் ரூபாயாக ($4,800bn; £3,800bn) தக்க வைக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு. ஆனால், அதிக இறக்குமதி செலவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரங்கள் மீதான மானியங்கள் போன்றவற்றின் காரணமாக அது அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(அனைவருக்கும் வீடு) என்ற திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது நரேந்திர மோதி அரசாங்கத்தின் முதன்மையான நலத் திட்டங்களில் ஒன்று.
கடந்த பட்ஜெட்டில், 2022-23 நிதியாண்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தகுதியான பயனாளிகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியுடன் 480 மில்லியன் ரூபாய் ($59bn; £47bn) ஒதுக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டில், கிராமப்புற, நகர்ப்புற வீடுகள் இருந்தாலும்கூட, அவை வெவ்வேறு அமைச்சகங்களால் செயல்படுத்தப்படுகின்றன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் நகர்ப்புற பகுதியை மேற்பார்வையிடுகிறது.
அதன் இலக்கை இன்னும் அடையவில்லை எனக் கூறி காலக்கெடுவை நீட்டிக்கவும் மத்திய அரசிடம் மேலும் நிதி உதவி அளிக்குமாறும் அந்த அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரியது.
இதற்கான காலக்கெடு டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் 1, 2022 முதல் ஜனவரி 23, 2023 வரை, நகர்ப்புறங்களில் 12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மேற்பார்வை செய்யும் அமைச்சகங்களின் தரவுகள்படி, இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பகுதியில் 2022-23 நிதியாண்டில் 26 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதாவது அரசாங்கத்தின் இலக்கைவிட 42 லட்சம் வீடுகள் குறைவாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நிதியமைச்சர் 600 பில்லியன் ரூபாயை ($74bn; £60bn) “2022-23 நிதியாண்டில் 38 மில்லியன் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு” ஒதுக்கீடு செய்தார்.
நீர்வள அமைச்சகத்தின் தரவுகள்படி, இந்த ஆண்டில் இதுவரை சுமார் 17 மில்லியன் குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து 50% குறைவாக உள்ளது.
இந்தத் திட்டம் ஆகஸ்ட் 2019இல் தொடங்கப்பட்டதில் இருந்து, 77 மில்லியன் குடும்பங்கள் குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் வசதியைப் பெற்றுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் நெட்வொர்க் “2022-23 நிதியாண்டில் 25,000 கி.மீ விரிவாக்கப்படும்” என்றும் நிதியமைச்சர் கடந்த ஆண்டு அறிவித்தார்.
25,000 கி.மீ புதிய கட்டுமானங்கள், ஏற்கெனவே உள்ள சாலைகளின் மேம்பாடு, மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
இதில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 12,000 கிமீ வரை இந்த நிதியாண்டில் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவு, ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 5,774 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான தரவு நம்மிடம் இல்லை.
முந்தைய ஆண்டுகளின் தரவுகள்படி, தினசரி கட்டுமானத்தின் வேகம் 2021-22இல் ஒரு நாளைக்கு 29கி.மீ ஆகவும் 2020-21 நிதியாண்டில் சராசரியாக 37 கி.மீட்டராகவும் இந்த ஆண்டில் நாளொன்றுக்கு 21 கி.மீட்டராகவும் சாலை கட்டுமான வேகம் குறைந்துள்ளது.