தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன – பொலிஸ்!!
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எம்.எம்.மொஹமட் மற்றும் பி. திவாரத்னவுக்கும் பதவி விலகுமாறு வலியுறுத்தி தொலைபேசியின் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களுக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் ஒரே வகையான தொலைபேசி இலக்கத்தில் இருந்து இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கமானது காலி பிரதேசத்தில் குறிப்பிட்ட முகவரியுடன் கூடிய தொலைபேசி இலக்கமாகும். இருப்பினும், அந்த முகவரியில் உள்ளவர் தற்போது இலங்கையில் இல்லை என தெரியவந்துள்ளது.
மேலும், இது குறித்து அவருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது
எவ்வாறாயினும், இந்த தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியன இந்த நிறுவனங்களின் ஆதரவை பெற்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
ஆனால், இந்த தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.