பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு!!
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி ஆகியவை பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுக்க இருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 200 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை பெறுவதற்கு பாகிஸ்தான் முயன்று வருகிறது. பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை மிக பெரிய அளவுக்கு உயர்ந்துள்ளது நாட்டின் அன்றாட வாழ்க்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது.
கடந்த வாரம் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில், வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக நேற்று பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.35 மற்றும் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.18ம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.249.80 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.262.80ம், மண்எண்ணெய் லிட்டர் ரூ.189 ஆகவும் உயர்ந்துள்ளது.