பிரதமர் பதவி கொடுத்தாலும் பா.ஜ.க.வுக்கு செல்ல மாட்டேன் – சித்தராமையா!!
ராமநகர் மாவட்டம் மாகடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னை இந்து விரோதி என்று பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். அக்கட்சியைச் சேர்ந்த சி.டி.ரவி என்னை சித்ராமுல்லா கான் என்று சொல்கிறார். மகாத்மா காந்தி இந்து அல்லவா? அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை கொண்டாடுபவர்கள் இந்துக்களா? பா.ஜனதாவினருக்கு மரியாதை இல்லை.
அவர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினருக்கு மரியாதை உள்ளதா? நான் முதல் மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தை அமல்படுத்தினோம். அனைத்து ஏழைகளுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டது. கிருஷி பாக்கிய, ஷீர பாக்கிய உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினேன். நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பாலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்துவோம். எனக்கு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ வழங்கினாலும் பா.ஜ.க.வுக்கு செல்ல மாட்டேன். எனது பிணம் கூட பா.ஜ.க.வுக்கு செல்லாது. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு கொள்கை, கோட்பாடுகள் இல்லை. ஆட்சி அதிகாரத்திற்காக பா.ஜ.க.வுடன் அக்கட்சி செல்லும். ஆட்சி அதிகாரத்திற்காக அக்கட்சியினர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வார்கள் என்றார்