காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றிய ராகுல் காந்தி!!
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டரை கடந்த ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை நிறைவடைகிறது.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் – ஐ – காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்துடன் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவடைகிறது. இந்நிலையில், பாத யாத்திரையின் இறுதி நிகழ்வாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல் காந்தி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடையும், அன்பு எப்போதும் வெற்றி பெறும். இந்தியாவில் நம்பிக்கையின் புதிய விடியல் ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.