மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்கள் மீது வழக்கு தொடர்வதா?-வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி!!
காங்கிரஸ் ஒற்றுமை ஆலோசனை கூட்டம் புதுவை 45 அடி சாலையில் உள்ள செந்தில் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:- கடந்த மாதம் வரை ரேஷன் கடையில் அரிசி போடப்பட்டது. இந்த மாதம் அரிசி போடவில்லை. ஏனெனில் மத்திய அரசு அரிசியை நிறுத்தி விட்டது. அடுத்த மாதம் அரிசிக்கு பதில் பணம் போடுவதும் நிறுத்தப்படும். இங்கிருக்கும் சபாநாயகர் மத்திய அரசிடமிருந்து பணம் வாங்கி கொடுத்தேன்.
அதிகாரிகள் செலவு செய்யவிலலை என கூறுகிறார். சபாநாயகர் ரூ.1400 கோடி மத்திய அரசிடமிருந்து வந்தது என்கிறார். ஆனால் அதிகாரிகள் ரூ.27 கோடிதான் மத்திய அரசிடமிருந்து வந்ததாக கூறுகிறார்கள். அதில் ரூ.1¼ கோடி மட்டுமே அதிகாரிகள் செலவு செய்திருக்கிறார்கள். ரங்கசாமி மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என நினைப்பதாக கூறுகிறார். அவர் அதிகாரிகளை குறை கூறுகிறார். 2 நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் பெண்களுக்கு ரூ.1000 போட்டதாக கூறுகிறார்கள். ஆனால் யாருக்கும் அந்த பணம்வந்து சேரவில்லை.
ரேஷன் கடையை திறக்காமல், மதுக்கடையை திறக்கிறார்கள். காமராஜர் தொகுதியில் நான் இருக்கும் வரை எந்த மது கடைகளும் இல்லை. ஆனால் இப்போது ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. சாமிபிள்ளை தோட்டத்தில் மதுக்கடையை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் காங்கிரசார் எதி்ர்ப்பு தெரிவித்ததால் மதுக்கடை திறக்க முடியவில்லை. முத்தியால்பேட்டையில் மதுக்கடையை திறக்க முயன்ற போது முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் போராடியபோது அவர்கள் மீது பெயிலில் வர முடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்திய பெண்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மக்களுக்கான அரசாங்கமா.? நமக்கு பணம் வரும்போது மின்கட்டணம் கட்டுவோம். ஆனால் இனி டெலிபோன் போல ப்ரிபெய்டு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மின்சாரம் நமது அரசின் சொத்து. அதற்கு யாரோ ப்ரிபெய்டு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். மத்திய அரசாங்கம் நமது சொத்தை திருடுகிறது. இதையெல்லாம் மாற்ற நாம் மக்களிடம் விழி்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் வீட்டு கதவை தட்டி நாம் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், காங்கிரஸ் சிப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.