துருக்கி மாணவர்களுக்கு கைவினை பயிற்சி!!
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலாவாக புதுவை வருகின்றனர். இவர்கள் புதுவையில் உள்ள கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கல்விச் சுற்றுலா பயன்படுகிறது.
அந்த வகையில் தற்போது துருக்கி நாட்டில் இருந்து 15-க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் புதுவை வந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள கலை, கல்வி, கலாச்சாரம் குறித்து தெரிந்துகொள்ள இருக்கின்றனர். பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியை திருகாஞ்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமியிடம் பயின்றனர்.
இதுகுறித்து சுடு களிமண் கலைஞர் முனுசாமி கூறும்போது, ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் புதுவை வருகின்றனர். அவர்கள் கல்வி, கலை, கலாச்சாரம் குறித்து பல்வேறு இடங்களுக்குச் சென்று தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் அழிவின் விளிம்பில் இருக்கும் சுடு களிமண் பொம்மை செய்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளித்தோம் என்றார்.