தேர்தலுக்கு அரசியல்வாதிகள் தயார்,மக்கள் தயாரில்லை – மஹிந்த அமரவீர!!
அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயார் ஆனால் நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயார் இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் தீவிரமடையும் பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
விவசாயத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளது. கடந்த அரசாங்கம் விவசாய கொள்கையை ஒரே கட்டமாக மாற்றியமைத்ததால் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்ததை,தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து இறுதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டன.
விவசாயத்துறையில் அறிமுகப்படுத்திய தவறான கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் இரசாயன உரம் விநியோகிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறு மற்றும் பெரும் போகத்தில் சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றனர்.அரசியலமைப்புக்கு அமைய உரிய காலத்திற்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அனைத்து காரணிகளையும் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுத்த வேண்டும்.
அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் தேர்தலுக்கு தயார் ஆனால் நாட்டு மக்கள் தேர்தலுக்கு தயார் இல்லை.நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு விரைவாக தீர்வு காணுமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருமாத அரச செலவுக்கு நிதி திரட்டுவது சிக்கலாக உள்ள நிலையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நிதி அச்சிட வேண்டும்,நாணயத்தை மீண்டும் அச்சிட்டால் தீவிரமடையும் பொருளாதார பாதிப்புக்கு யார் பொறுப்பு கூறுவது என்றார்.