தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது – குமார வெல்கம!!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதால் அரசாங்கம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நிச்சயம் பிற்போடும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட தலைவர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியதை தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அரசாங்கம் நடத்தாது என்பது உறுதியாகி விட்டது.
அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என காண்பிக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கு மக்களாணை கிடையாது.தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதால் ஏதாவதொரு வழிமுறையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போடும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயார் என மக்கள் மத்தியில் குறிப்பிடும் அரசாங்கம் தேர்தலை பிற்போட திரைமறைவில் இருந்துக் கொண்டு அரசியல் சூழ்ச்சி செய்கிறது.தேர்தலை பிற்போடலாம். ஆனால் மக்களின் அரசியல் தீர்மானத்தை பிற்போட முடியாது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை பெற்றுக்கொண்டு அரசாங்கம் கோடி கணக்கில் கடினமில்லாமல் சம்பாதித்துள்ளது. கட்டுப்பணத்தை எதிர்வரும் ஆறு அல்லது ஒரு வருடத்திற்கு தாராளமாக பயன்படுத்தலாம். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்றார்.