;
Athirady Tamil News

ஜோன்சனை மிரட்டிய புடின் – அம்பலமான போர் திரைமறைவின் பின்னணி..!

0

உக்ரைன் போர் ஓராண்டாகத் தொடரும் நிலையில், அந்த சமயத்தில் திரைமறைவில் என்ன நடந்தது என்பது குறித்தும் புடின் எப்படி தன்னை மிரட்டினார் என்பது குறித்தும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் போரைத் தொடங்கியது. இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றே முதலில் பலரும் நினைத்தும் ஓராண்டாகப் போர் தொடர்ந்து நீட்டிக்கிறது.

இதனால் உலக நாடுகள் மத்தியில் அமைதியற்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் கடுமையான முயன்று வருகிறது. இருப்பினும், போர் நின்றதாகத் தெரியவில்லை.

இதனிடையே உக்ரைன் போர் நடந்த போது, திரைமறைவில் நடந்த விடயங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த போது, உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் பின் அணிவகுத்து நின்றன.

ரஷ்யாவுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, அதிகளவான பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே அந்த சமயத்தில் போரைத் தொடங்கும் முன்பு ரஷ்யா திரைமறைவில் என்ன செய்தது என்பது குறித்த தகவல்கள் உலக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

உக்ரைன் மீதான போரை ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, பொறிஸ் ஜோன்சனை புடின் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியுள்ளார். போருக்கு முன்பே, எல்லையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வந்தது.

அப்போது பிரதமராக இருந்த பொறிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பலரும் உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அப்போது தான் ரஷ்யாவில் இருந்து அந்த அழைப்பில் புடின் தனக்கு மிரட்டல் விடுப்பதை போரிஸ் உணர்ந்துள்ளார்.

இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறுகையில், “என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது புடின் ஒரு கட்டத்தில் என்னை அச்சுறுத்தத் தொடங்கினார். பொறிஸ் ஜோன்சன், நான் உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஒரு ஏவுகணை போதும்.

அடுத்த ஒரே நிமிடத்தில் என்ன நடக்கும் என உனக்கே தெரியும்’ என்று கூறி புதின் என்னை மிரட்டினார்” என்று அவர் கூறினார்.

உக்ரைன் போர் தொடங்கியது முதலே ரஷ்யாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடு எடுத்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு முழு ஆதரவு அளித்த உலக தலைவர்களில் பொறிஸ் ஜோன்சன் முக்கியமானவர் ஆவர்.

புதின் உடன் நடந்த உரையாடல் குறித்து பொறிஸ் ஜோன்சன் மேலும் கூறுகையில், “போர் ஆரம்பிப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்பு இது நடந்தது. உக்ரைன் உடனடியாக நோட்டோவில் இணைய வாய்ப்பே இல்லை என்று நான் கூற முயன்றேன்.

ஆனால், அதை அவர் புரிந்து கொள்ளவில்லை. மேலும், போர் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்தால் நேட்டோ நடவடிக்கை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது, குறையாது என்றும் நான் கூறினேன்.

ஆனால், அவர் கேட்பதாக இல்லை. அப்போது அவர் கூறினார், ‘பொறிஸ் ஜோன்சன், உக்ரைன் உடனடியாக நேட்டோவில் சேரப் போவதில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதற்கு என்ன பொருள்.

வரும் காலத்தில் உக்ரைன் நிச்சயம் நேட்டோவில் சேர போகிறது. அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் என்று புடின் என்னிடம் முதலில் கூறினார்” என தெரிவித்தார்.

பொறிஸ் ஜோன்சன் உடன் நடந்த இந்த உரையாடலுக்கு சில காலம் பின்னரே உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய பொறிஸ் ஜோன்சன், “புதின் மிகவும் நிதானமாகவே பேசினார். எனக்கு மிரட்டல் விடுக்கும் போது கூட சகஜமாக பேசினார். நான் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயன்றேன்.

அதற்குச் சம்மதிக்காமல் புதின் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்” என்று அவர் தெரிவித்தார். உலக செய்தி சேவை வெளியிட்ட இந்த ஆவணப்படத்தில் உக்ரைன் போருக்கு முன்பே, ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பிளவுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு முன்னதாக நேட்டோவில் சேர உக்ரைன் எந்தளவுக்கு முயன்றது என்பது குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஆவணப்படத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கருத்துகளும் இடம் பெற்றுள்ளது.

அதில் ஒரு இடத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “நாளை ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அனைவருக்கும் தெரியும் போது, அதை நிறுத்த ஏன் இன்றே நடவடிக்கை எடுக்கக் கூடாது. எங்களால் முடியாது என்று நினைத்தால் நீங்களே நிறுத்தலாமே.” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.