ஜப்பான் பொருளாதாரத் தடை – ரஷ்யா பதிலடி – தீவு விடயத்தில் இனி பேச்சுக்கு இடமில்லை!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் ஜப்பான் சில பொருளாதார கட்டுப்பாடுகளை ரஷ்யா மீது அமுலாக்கியிருந்தது, அந்தவகையில் அண்மையில் ரஷ்யாவிற்கான முக்கிய சில பொருள் ஏற்றுமதிகளை நிறுத்தியிருந்தது.
இதன்விளைவாக, சர்ச்சைக்குரிய குரில் தீவுப் பிரச்சனை தொடர்பிலும், அந்தத் தீவுகளில் ஜப்பானிய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பிலும் இனி ஜப்பானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படாது என ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவின் வசமுள்ள ஜப்பான் உரிமை கோரும் சர்சைக்குரிய சில தீவுகளில் ஜப்பானிய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை வருடந்தோறும் நடத்த ஜப்பான் கோரி வரும் நிலையில், இனி அதனைத் தொடரப்போவதில்லை என ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவினால் குரில்ஸ் என அழைக்கப்படும், வடக்கு ஜப்பானிய தீவான ஹொக்கைடோவிற்கு அப்பால் உள்ள தீவுகளுக்கு ஜப்பானும் உரிமை கோரி வருவதுடன், அந்தத் தீவுகளில் ஜப்பானிய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆண்டுதோறும் நடத்தவும் ரஷ்யாவை கோரி வருகின்றது.
குறித்த தீவுகளுக்கு சுற்றிய கடற்பரப்பில் ஜப்பானிய மீனவர்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ரஷ்யா சென்ற ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி இருந்ததுடன், தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இனி தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளது.