செங்கோட்டையன் தனது பெயரை தவறுதலாக ‘செங்கோட்டை’ என்று கூறி உள்ளார்- அமைச்சர் எ.வ.வேலு கிண்டல்!!
ஈரோட்டில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதசார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்த தலைமை கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடத்தில் நேரடியாக சென்று பார்த்த போது வரவேற்பு உள்ளது. தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெண்கள் வாக்கு தி.மு.க.வுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. திருமகன் ஒன்றை ஆண்டு காலத்தில் இறந்து விட்டார்.
பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். ஈரோடு மாநகர பகுதியில் 400 கோடி அளவுக்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்.எல்.ஏ.வாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும். எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா.
எனவே திருமகன் ஈவெரா விட்டு சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர். அ.தி.மு.க. சார்பாக செங்கோட்டையன் எம் எல் ஏ ஒரு பேட்டியில் கூறும்போது, இந்த தேர்தல் முடிவு என்பது செங்கோட்டைக்கே தெரியும் என்று கூறி இருக்கிறார். அவர் தவறுதலாக தனது பெயரை கூறுவதற்கு பதில் அப்படி சொல்லி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாக அவர் தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் மாநகராட்சி வளரும் என்று. நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி குறித்து பேசி இருந்தோம். அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் நாளை மறுதினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் அளித்த பதிலை தவறாக புரிந்து கொண்ட விஷமிகள் சிலர் அமைச்சர் நேரும், இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட தான் கேட்டேன். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டு உள்ளனர். எது செய்தாலும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.