கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு பற்றி சென்னை ஐ.ஐ.டி.யில் நாளை ஜி20 கருத்தரங்கு-கண்காட்சி!!
ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகள் தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி நாடுமுழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் ஜி20 மாநாடுகள், கருத்தரங்குகள் தொடங்கி உள்ளன. இதற்காக ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர். அவர்களில் 75 பேர் புதுச்சேரியில் இன்று நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை உள்பட சில இடங்களில் ஜி20 மாநாடு கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வரும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை சுற்றி பார்ப்பதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி20 நாடுகளின் கல்வி தொடர்பான கருத்தரங்குகளை சென்னை, அமிர்தசரஸ், புவனேஷ்வர் மற்றும் புனேயில் உள்ள முன்னணி கல்வி கழகங்களில் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ரிசர்ச் மையத்தில் உள்ள கட்டிடத் தில் 3,6,7 ஆகிய தளங்களில் கல்வி கருத்தரங்கும், கண்காட்சியும் நடைபெற உள்ளது. அதில் அரங்குகள் அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வெளியில் இருந்து அரங்கிற்கு வரும் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. சென்னையில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் கல்வி தொடர்பான கருத்தரங்கு, கண்காட்சி நடப்பது இதுவே முதல் முறையாகும். சென்னையில் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் கண்காட்சி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு, “கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்கு” என்று தலைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
எனவே டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு தொடர்பாக நாளை நடக்கும் ஜி20 அமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் விவாதிக்கப்படும். மொத்தம் 3 அமர்வுகளாக நாளை கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் உயர் கல்வியில் உள்ள உயர்தரமான படிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்படும். ஆற்றலை வெளிப்படுத்தும் தொழில் நுட்பத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். இதில் எடுக்கப்படும் முடிவுகள் ஜி20 மாநாட்டில் வைக்கப்படும். எனவே சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நாளைய கல்வி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 200 மாணவர்கள் பங்கேற்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் 100 பேருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 900 பேர் இந்த கருத்தரங்கு கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 கண்காட்சிக்காக அமைக்கப்படும் அரங்குகளில் பிப்ரவரி 1 மற்றும் 2-ந் தேதிகளில் மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.