இரட்டை இலை சின்னம் முடங்கினால் பாஜக நடுநிலை வகிக்க திட்டம்!!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா மேலிடம் ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டால் சுமார் 8 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே கிடைக்கும் என்பது தெரியவந்தது. மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை பாரதிய ஜனதா கைவிட்டது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதால் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் எந்த அணிக்கு பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது. இந்த இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். ஒருவேளை இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்கும் கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும்.
ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தனித்து போட்டியிடாமலும், அதே சமயத்தில் அ.தி.மு.க.வை ஆதரிக்காமலும் செயல்பட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்க முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசகமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியில் அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு பரீட்சார்த்த களம் அல்ல. 2024-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு” என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே நாளை நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இந்த அடிப்படையில்தான் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் நிலையில் அந்த தொகுதியில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கவும் தமிழக பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.