வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் உயிருக்கு ஆபத்தான குழிகளால் தினமும் வாகன ஓட்டிகள் அவதி!!
சென்னை வில்லிவாக்கம் ரெட்ஹில்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்க பாதை 440 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய சுரங்கப்பாதை ஆகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுரங்கபாதையில் கொளத்தூர், மாதவரம், ரெட்ஹில்ஸ் பகுதிகளுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் உள்ள ‘லெவல்கிராசிங்’ பகுதியில் மேம்பால பணி நடைபெற்று வருவதையொட்டி தற்போது இந்த சுரங்கப்பாதையின் வழியாக தினமும் வாகன போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் உள்ள குண்டும் குழிகளில் வாகனங்கள் சிக்கி தடுமாறிச் சென்று வருகின்றன.சுரங்க பாதையின் சுற்றுசுவர் வழியாக தண்ணீர் கசிவினால் சேறும், சகதியுமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல பள்ளங்கள் உள்ளன. அதில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தடுமாறி விழுந்து பலர் காயம் அடைந்து வருகிறார்கள்.
எனவே இந்த சுரங்கபாதையை உடனடியாக பழுது பார்த்து அங்குள்ள குண்டும், குழிகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- வில்லிவாக்கம் சுரங்கபாதையில் பல ஆண்டுகளாக் சீரமைப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் குண்டும் குழிகள் அதிகம் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் ஒரு சில ‘பேட்ச்’வேலைகளை மேற் கொள்கின்றனர். ஆனால் அது குறுகிய ஆயுட்காலம் கொண்டது. இந்த சுரங்கப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால் மீண்டும் உடைந்து குண்டும் குழியுமாகிறது. இந்த சுரங்கப்பாதையில் தினமும் பல வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகிறார்கள்.
சுரங்கப் பாதையின் ஓரங்களில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. வில்லிவாக்கம் சுரங்கப் பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. பள்ளங்களில் வாகனங்கள் சிக்குவதாதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் தரமற்ற ‘பேட்ச்’ஒர்க் பணிக்கு பதிலாக நிரந்தர தீர்வு வேண்டும். சுரங்கப்பாதையின் தெற்கு பகுதியில் உள்ள சாலையை அவசரமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இப்பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சுரங்கபாதையை சீரமைக்க டெண்டர்விடும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.