மக்கள் மத்தியில் எப்போதும் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் – சாகர காரியவசம்!!
மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகள் தற்போது வெட்கமில்லாமல் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள்.
தேர்தல் வெற்றிக்கு மக்கள் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் உண்டு.தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் என ஸ்ரீ லங்கா பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதாக எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி என்ற ரீதியில் தயாராக உள்ளோம்.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கட்சி என்ற ரீதியில் எமக்கு இல்லை.வெற்றி,தோல்வி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.
2016 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நல்லாட்சி அரசாங்கம் உரிய காலத்தில் நடத்தவில்லை.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.பொதுஜன பெரமுனவின் அழுத்தத்திற்கு அமையவே 2018 ஆம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபை தேர்தலை நடத்த நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்கள்.மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை தேர்தலை தோற்றுவித்த நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகள் வெட்கமில்லாமல் தற்போது உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வெற்றிக்காக மக்கள் கூட்டங்களை நடத்த வேண்டிய தேவை கிடையாது.தேர்தலை இலக்காக கொண்டு கிராமிய மட்டத்தில் விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு தனி இடமுண்டு,நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்பார்கள். இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம் என்றார்.