டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு : தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை!!
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,387 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 1,426 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 741 டெங்கு நோயளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 491 டெங்கு நோயளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 194 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை போன்ற பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்படும்போது மருத்துவரை அணுகுவதும், நோய்வாய்ப்பட்ட மூன்றாவது நாளிலாவது ஆய்வகப் பரிசோதனைகளை செய்துகொள்வதும் மிகவும் அவசியம் என்று தொற்றுநோயியல் துறை கூறுகிறது.
இது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க கருத்து தெரிவிக்கையில்,
இந்த மாதத்தில் மாத்திரம் 8,400 டெங்கு நோயாளர்களும், கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7,700 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது அதன் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகம் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது கம்பஹா, கொழும்பு, களுத்துறையிலும் மேலும் புத்தளம், கல்முனை மற்றும் யாழ்ப்பாணத்தில் அதிகம் டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார்.