சீனாவின் அறிவிப்பு தொடர்பில் நாணய நிதியத்திடமிருந்து உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!!
கடன் மறுசீரமைப்பிற்கு சீனா வழங்கியுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியத்தினால் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது , கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தினால் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சீனாவின் அறிவிப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் அரசாங்கத்திற்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பத்தை விட தற்போது சாதகமான நிலைமையே காணப்படுகிறது என்றார்.