;
Athirady Tamil News

13 ஐ அமுல்படுத்துவது அரசாங்கத்தின் கடப்பாடு !!

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும் என்றும் அதனை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்றும் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன், 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஹட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது நாட்டின் அரசமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

“அதேபோல 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதால் வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்லாது, 9 மாகாணங்களும் அதன்மூலம் பயன்கிட்டும். எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ அமுல்படுத்த வேண்டும்” என்றார்.

“லண்டன், மலேசியா போன்ற நாடுகளில் உள்ளூராட்சி சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள்கூட, எமது நாட்டில் உள்ள மாகாணசபைகளுக்கு இல்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதியே உறுதியான முடிவுக்கு வரமுடியும்” என இராதா எம்.பி கூறினார்.

“காணி உரிமை மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மலையக அடையாளங்கள் அவசியம். அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலையக – 200 நிகழ்வில் இதனை வலியுறுத்துவோம். அத்துடன், மலையகம் 200 நிகழ்வுக்கு தமது நாட்டின் சார்பில் சிறப்பு பிரதிநிதி ஒருவரை இந்தியா அனுப்பும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.