உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க வேண்டும் – தென் கொரியாவிடம் நேட்டோ வேண்டுகோள்!
உக்ரைனுக்கு கூடுதலான இராணுவ ஒத்துழைப்பை வழங்குமாறு தென்கொரியாவை நேட்டோ (NATO) அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
முறுகலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்குவதில்லை எனும் கொள்கையை ஜெர்மனி, நோர்வே போன்ற நடுகளைப் போல், தென்கொரியாவும் பின்பற்றுகின்றது.
இருப்பினும், ஜெர்மனி, நோர்வே நாடுகள் குறித்த கொள்கைகளைத் தாண்டி உக்ரைன் க்கு உதவி புரிகின்றன எனவும், அதேபோல் தென்கொரியாவும் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நேட்டோ (NATO) அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க் தென்கொரியாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆசியப் பயணத்தின் முதல் கட்டமாக தென்கொரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க், அடுத்த கட்டமாக ஜப்பான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரேனியப் போர் மற்றும் சீனாவிடமிருந்து அதிகரிக்கும் போட்டி ஆகியவற்றிற்கு மத்தியில் ஆசிய நாடுகளின் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் அவரது பயணம் அமைந்துள்ளது.