;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் – சட்டமாதிபரை வலியுறுத்தும் எதிர்க்கட்சி!!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிராக விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் சட்டத்தரணிகள் இந்த கோரிக்கையை திங்கட்கிழமை (30) சட்டமா அதிபரிடம் முன்வைத்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு எதிராக விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமையும் இல்லாமலாக வேண்டும். அவரை 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதே போன்று நிலாந்த ஜயவர்தனவும் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எவருக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிற்கு தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டுள்ள எந்தவொரு கட்சியுடனும் தாம் கூட்டணியமைக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயத்தில் ஏன் அரசாங்கமும், பொலிஸாரும் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர்? தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை மறைப்பதும் குற்றமாகும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.