இங்கிலாந்து மீது ஏவுகணை தாக்குதல் ரஷ்ய அதிபர் புடின் மிரட்டல்: இங்கிலாந்து மாஜி பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி தகவல்!!
உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தார் என்ற அதிர்ச்சி தகவலை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அப்போது தான் ரஷ்யாவில் இருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்துப் பேசிய போது தான், புடின் தனக்கு மிரட்டல் விடுப்பதை போரிஸ் உணர்ந்துள்ளார்.
பிபிசியின் புதிய தொடரான புடின் மற்றும் மேற்கு நாடுகள் என்ற தொடருக்கு போரிஸ் பேட்டியளிக்கையில்,‘‘என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது புடின் ஒரு கட்டத்தில் என்னை அச்சுறுத்தத் தொடங்கினார். போரிஸ், நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஒரு ஏவுகணை போதும். அடுத்த ஒரே நிமிடத்தில் என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியும் என்று கூறி என்னை மிரட்டினார்’’ என்றார். போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகள் எடுத்து உக்ரைனுக்கு முழு ஆதரவு அளித்தவர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.