பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் – முதல் கட்ட அமர்வு இன்று தொடக்கம்!!
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி உரை நிகழ்த்தி முடித்ததும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பகுதிகளாக நடக்கவுள்ளது. முதல் அமர்வு இன்று தொடர்ங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கும். அடுத்த அமர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கு பூஜ்ய நேரம் கேள்வி நேரம் எதுவும் இருக்காது. பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இதன் முடிவில் இரு சபைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிப்பார்.
இந்தக் கூட்டத்தொடரில் பி.பி.சி. ஆவணப்பட விவகாரம், சீன எல்லையில் நிலவும் பதற்றம், தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் பழைய கட்டடத்திலேயே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.