மாணவர்களுக்கு அடுத்த மாதம் சீருடை-முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்!!
புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடகள போட்டிகள் நடந்தது. இதில் 8 மண்டலங்களை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் 648 பேர் பங்கேற்றனர். குண்டு எறிதலில் 14 வயது பிரிவில் காரைக்கால் நிர்மலாராணி மகளிர் பள்ளி மாணவி ஜனனிகா, 19 வயது பிரிவில் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி மாணவி லோகிதா சாதனை படைத்தனர். 19 வயது பிரிவில் தவளகுப்பம் அரசு பள்ளி மாணவி கோபிகா வட்டு எறிதல், காரைக்கால் நிர்மலாராணி பள்ளி மாணவி ஹரிபிரியா நீளம்தாண்டுதலில் சாத னை படைத்தனர். 17 வயது பிரிவு ஓட்டத்தில் ஓதியம்பட்டு குளூனி பள்ளி மாணவி மதுமிதா, 14 வயது பிரிவில் பாகூர் ஆல்பா பள்ளி மாணவி ஆர்த்திகா ஈட்டி எறிதலில் சாதனை படைத்தனர்.
இதன் பரிசளிப்பு விழா கோரிமேட்டில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:- மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என விரும்புகிறார்களே அதை கொண்டுவருவதுதான் அரசின் எண்ணம்.
இதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குகிறோம். நன்றாக படித்தால் நல்ல சிந்தனைகள் வளரும். அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் பேசினார். அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் வாழ்த்தி பேசினார்.