இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருப்பு முனையாக அமையும் – அனுரகுமார!!
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக அமையும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் மக்களாணை கிடையாது என்பது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை நகரில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக அமையும்.2022 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போட அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு சூழ்ச்சிகளை வகுத்து வருகிறது.
தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் போட்டித்தன்மை காணப்படுமாயின் தேர்தலை பிற்போட அரசாங்கம் எவ்வித சூழ்ச்சிகளையும் முன்னெடுக்காது. ரணில் -ராஜபக்ஷர்களை ஒட்டுமொத்த மக்களும் வெறுப்பதால் தேர்தலை நடத்துவதை அரசாங்கம் பிற்போட ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுகிறது.
ரணில் – ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் பாராளுமன்றம் ஊடாகவும்,அரச அதிகாரத்தை கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளாத நடவடிக்கை ஏதும் உள்ளதா,அனைத்து குறுக்கு வழிகளையும் அரசாங்கம் பிரயோகித்துள்ளது.
பாராளுமன்றத்தின் ஊடாக தேர்தலை பிற்போடும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு உயர்நீதிமன்றத்திற்கு உண்டு,ஆகவே நீதிமன்றம் நாட்டு மக்களின் தேர்தல் உரிமையை பாதுகாக்கும் என்ற முழுமையான நம்பிக்கை உள்ளது.
தேர்தலை பிற்போடும் அனைத்து முயற்சிகளும் தோர்வியடைந்ததை தொடர்ந்து தற்போது தேர்தல்கள் ஆணைக்குழவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.நாட்டை சீரழித்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் மக்களாணை கிடையாது என்பது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தப்படும்.
தேசிய மக்கள் சக்தி ஊடாக அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை மக்கள் உறுதிப்படுத்துவார்கள்.மக்களாணை இல்லாத ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியாது.பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றால் ஆட்சிமாற்றம் நிச்சயம் ஏற்படும் என்றார்.