ஆப்கானிஸ்தானில் பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான்கள் தடை- ஐ.நா. சபை எச்சரிக்கை!!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்போதில் இருந்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளாக தலிபான் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வரையில் புர்கா அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். தற்போது அங்கு 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ், ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமீனா முகமது ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று பெண்களுக்கு எதிரான செயல்கள் பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்களின் செயல்பாட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வருவதாக தலிபான்கள் தரப்பில் ஐ.நா. குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் பெண்கள், சிறுமிகள் படிக்க வாய்ப்பு உருவாகும் என்று கருதப்பட்டது.
ஆனால் தலிபான்கள் பெண் உதவி பணியாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர். இது பல முக்கியமான மனிதாபிமான திட்டங்களுக்கு மரண அடி என்று ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தலிபான்கள் இந்த கட்டளைக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் இதுபேரழிவை ஏற்படுத்தும் என்றார்.