பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதியாக உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை- பிரதமர் மோடி!!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று.
அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவது மிக பெரிய கவுரவம். பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை. அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைய உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எடுத்து காட்டும் பட்ஜெட்டாக இருக்கும். நாட்டுக்கும், குடிமக்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.
மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதை உலகமே உற்று நோக்குகிறது. எதிர் கட்சிகள் தங்களது குரல்களை எழுப்பலாம். ஆனால் விவாதங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். எதிர் கட்சிகளின் குரல்களை நாங்கள் மதிக்கிறோம். பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பேச உரிய நேரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.