கொல்லம்-ஆலப்புழா காயலில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து!!
கேரளாவின் கொல்லம்-ஆலப்புழாவில் உள்ள காயலில் சுற்றுலா பயணிகள் தங்க படகு வீடுகள் உள்ளன. இந்த படகு வீடுகளில் தங்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்காக அதிநவீன வசதிகளுடன் இங்கு ஏராளமான படகு வீடுகள் உள்ளன. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கேரளா வந்தனர்.
அவர்கள் கொல்லம் பொன்மனை பகுதியில் உள்ள படகு வீட்டில் தங்கி இருந்தனர். இந்த படகு வீட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகு தீப்பிடித்து எரிவதை கண்டதும் அக்கம்பக்கத்தில் நின்ற படகுகளில் இருந்தவர்கள் விரைந்து சென்று அதில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அவர்கள் இன்னொரு சிறிய படகில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்து பற்றி கொல்லம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து கொல்லம், கருநாகப்பள்ளி, சாவரா பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரம் போராடி படகில் பிடித்த தீயை அணைத்தனர். என்றாலும் படகு வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. படகு வீட்டில் திடீரென தீப்பிடித்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.