பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பது குறித்து பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில மைய குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். தமிழக பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 2 அணியில் யாருக்கு ஆதரவு கொடுப்பது அல்லது நடுநிலை வகித்தாரா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு கேட்டநிலையில் இறுதி முடிவை எடுக்க இக்கூட்டம் கூடியுள்ளது. இது தவிர அண்ணாமலை நடைபயணம், புதிய திட்டங்கள், முறையாக செயல்படாத கட்சி நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து மாற்றம் செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மார்ச் மாதம் அண்ணாமலை தொடங்க உள்ள நடைபயணத்தின்போது யாருடைய வீட்டிலும் தங்குவது இல்லை எனவும், மரத்தடியில் கட்டிலோ அல்லது படுக்கை விரித்தோ ஓய்வு எடுக்கலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.
நடைபயண செலவிற்கான நன்கொடை வசூல் போன்றவை பற்றியும் ஆலோசித்தனர். இக்கூட்டத்தை தொடர்ந்து மாலையில் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 69 மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்கிறார். குறிப்பாக ஈரோடு இடைத்தேர்தல் பற்றி இதில் முடிவு செய்யப்படுகிறது. பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை இன்று முடிவு செய்கிறார்கள்.
பா.ஜ.க.வின் முடிவை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எதிர்பார்த்து காத்து இருக்கின்ற நிலையில் நாளை (1-ந்தேதி) அண்ணாமலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டதால் பா.ஜ.க.வின் முடிவை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து தெரிவிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர். அதனால் நாளை பா.ஜ.க. தனது முடிவை அறிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.