45000க்கு மேல் வரி – அரசாங்கத்தின் கையாலாகாத்தனம்..! சஜித் குற்றச்சாட்டு !!
இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும், மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்களுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் மற்றும் செயற்திறனற்ற காரணங்களால் சர்வதேசத்தை கையாளும் திறன் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தை கையாளும் கலையை ரணசிங்க பிரேமதாஸ நிரூபித்துள்ளமையையும் நினைவு கூர்ந்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி. ரோஹினி மாரசிங்க, நாட்டின் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்காத மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும், அதற்கான பாராட்டு அவருக்கு கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நாட்டில் இலட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு உயர் தர பரீட்சைக்குத் தோற்ற மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்காத இந்த அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்வருவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
அழகான வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு நாட்டை மீண்டும் ஒரு முறை வங்குரோத்து மாக்கியது போல் மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்தால், நாடு தற்போது இருக்கும் இடத்திலிருந்து மேலும் வீழ்ச்சியடையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.