போர் கொதி நிலை..! ரஷ்யாவை அழிக்க பாரிய திட்டம் !!
ரஷ்யாவை அழித்துவிட வேண்டும் என்பதே மேற்குலகின் திட்டம் என இராணுவ ஆய்வாளர் கலாதிநி அருஸ் கூறுகிறார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஷ்யா – உக்ரைன் கள நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், ரஷ்யா – உக்ரைன் யுத்த களத்தில் இரு தரப்பும் பாரிய யுத்தத்திற்கான தயார்நிலைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ரஷ்யா 3 லட்சம் படையினரை புதிதாக இணைத்து அவர்களுக்குரிய பயிற்சிகளை வழங்கி மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருகின்றது.
அதே சமயம், சப்ரோசியா பகுதியில் 40 ஆயிரம் படையினரை குவித்து மேற்குலக நாடுகளிடமிருந்து தாங்கிகளை வாங்குவதன் மூலம் ஒரு வலிந்து தாக்குதலுக்கு உக்ரைன் தயாராகி வருகிறது.
இந்த யுத்தம் உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலே இடம்பெறுவதாக இருந்தாலும் நேட்டோ அமைப்பு இந்தப் போருக்குள் உள்வாங்கப்படுவதாக அவதானிக்கப்படுகிறது.
முதலில் தலைக்கவசங்களை வழங்கினார்கள், பின்னர் பீராங்கிகளை வழங்கினார்கள், கவச வாகனங்களை வழங்கினார்கள், தற்போது தாங்கிகளை வழங்குகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்த கட்டமாக அவர்கள் விமானங்களை வழங்குவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
ரஷ்யாவின் உட்பகுதிகளுக்குள் தாக்குதலை நடத்துவது என்பது அது ரஷ்யா மீதான தாக்குதலாகத் தான் அமையும் என்பதால், ரஷ்யா அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து விட்டது.
ரஷ்யா இந்தப் போரில் வெற்றி ஈட்டுமாக இருந்தால் அல்லது உக்ரைன் இந்தப் போரில் தோல்வி அடையுமாக இருந்தால் இந்த யுத்தம் நேட்டோவின் தோல்வியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆகையால் உக்ரைன் வீழ்ச்சி அடைகின்ற தருணத்தில், இந்தப் போர் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் நேட்டோவாலும் மேலும் வழி நடத்தப்படலாம் எனும் அச்சம் தற்போது எழுந்திருப்பதாக அவர் கூறுகிறார்.