;
Athirady Tamil News

சஜித், அநுரகுமாரவின் கோரிக்கைக்கே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஐக்கிய தேசிய கட்சி!!

0

உள்ளூராட்சிமன்ற தேர்தலை மக்கள் கோரவில்லை. மாறாக சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவின் கோரிக்கைக்கே தற்போது தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த திட்டமும் இவர்களுக்கு இல்லை என ஐக்கிய தேசிய கட்சி கரன்தெனிய தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி நுவன் சொமிரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை நேற்று (ஜன 31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் எந்த தேர்தலையும் எதிர்பார்ப்பதில்லை.

மாறாக பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த 6மாதங்களுக்கு முன்னர் மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள எந்தளவு கஷ்ட நிலைக்கு முகம்கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

ஆனால் தற்போது அந்த நிலையை இல்லாமலாக்கி, பொருளாதார பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓரளவேனும் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது, பல கோடி ரூபா செலவிட வேண்டி ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் இருந்த தேர்தல் செலவைவிட இம்முறை தேர்தல் செலவும் அதிகமாகும். வாக்குச்சீட்டு அச்சிடுவதற்காக கடந்த முறை 20கோடி ரூபா செலவாகி இருந்தது. ஆனால் தற்போது அது 30கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்காக தற்போது செலவிடப்படும் இந்த நிதியை அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்க முடியும்.

அத்துடன் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தலை மக்கள் கோரவில்லை. மாறாக அதிகார பேராசையில் இருக்கும் சஜித் மற்றும் அநுரகுமார அணியினரே தேர்தல் நடத்தப்படவேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைக்காகவே தற்போது தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துவரும் நடவடிக்கை, இன்னும் 6 மாதங்களில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

ஏனெனில் கடன் மறுசீரமைப்புக்கு தேவையான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதிக்கு முடியுமாகி இருக்கிறது.

அதனால் பொருளாதார பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வுகண்டால், தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல போகும் என்ற பயம் இவர்களுக்கு இருக்கின்றது. அதனால் தற்போதுள்ள நெருக்கடி நிலையை பயன்படுத்தி, தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்றவே இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.