காலாவதியான 9 லட்சம் அரசு வாகனங்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஓடாது: நிதின் கட்கரி !!
மத்திய-மாநில அரசுகள், அரசு போக்குவரத்துக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் லட்சக்கணக்கான வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட அரசு வாகனங்களை அப்புறப்படுத்துவது பற்றி போக்குவரத்து விதிகளில் ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. இதன்படி அந்த வாகனங்களை அப்புறப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் அவர் இதுதொடர்பாக பேசும்போது கூறியதாவது:- 15 ஆண்டுகளுக்கும் மேலான 9 லட்சத்துக்கும் அதிகமான அரசு வாகனங்களை அகற்றுவதற்கு நாங்கள் தற்போது ஒப்புதல் அளித்துள்ளோம். எனவே இனி, மாசுபடுத்தும் அரசு பஸ்கள் மற்றும் கார்கள் சாலைகளில் செல்லாது. அதற்கு பதிலாக மாற்று எரிபொருளுடன் கூடிய புதிய வாகனங்கள் வரும். இது காற்று மாசுபாட்டை பெருமளவு குறைக்கும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் அவை நிறுத்தப்படும். அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும். மாசுபடுத்தும் வாகனங்களுக்கு பதிலாக எத்தனால், மெத்தனால், பயோ-சி.என்.ஜி., பயோ-எல்.என்.ஜி. மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முறையான போக்குவரத்து அணுகுமுறையை நாடு பின்பற்றினால் 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு நிலை, நிகர பூஜ்ஜியத்தை அடைந்துவிடும். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய மின்சார பஸ்களை இயக்குவது காலத்தின் தேவை. இது மக்களை பொதுப்போக்குவரத்தை நோக்கி ஈர்க்க வைக்கும். மின்சார வாகனங்களில் தனியார் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பழைய அரசு வாகனங்களை அப்புறப்படுத்துவதோடு, அந்த வாகனங்களை சிதைப்பதற்கான நடவடிக்கை பற்றியும் போக்குவரத்து விதிகளில் கூறப்பட்டு உள்ளது. வாகன சிதைப்புக்கொள்கை பற்றி பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் 150 கி.மீ. தூரத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு சிதைப்பு மையமாவது அமைக்கப்படும் என நிதின் கட்காரி கூறியிருந்தார்.
இந்தநிலையில் பழைய அரசு வாகனங்களை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, நாட்டின் பாதுகாப்புக்காகவும், சட்டம் ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல தனியார் வாகனங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தகுதி சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.