உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றம்!!
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இந்தியாவின் ‘நம்பர் 1’ பணக்காரர், தொழில் அதிபர். கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்ததால், உலகப் பணக்காரர்களில் 2-வது இடத்தைப் பிடித்து பிரமிப்பூட்டினார் கவுதம் அதானி. பின்னர் அவர் 3-வது இடத்துக்கு இறங்கினாலும், நீண்ட காலம் அதில் நீடித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இக்குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அவை 3-வது நாளாக திங்கட்கிழமையும் சரிவுடன் வணிகமானதால் அவரது சொத்து மதிப்பு 84.4 பில்லியன் டாலர்களாக குறைந்தது. இதனால், புளூம்பெர்க் நிறுவன பட்டியல்படி உலகின் ‘டாப்-10’ பணக்காரர்கள் வரிசையில் இருந்து அதானி வெளியேற்றப்பட்டார்.
அவர் 4-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். ஆனால் தற்போதும் அதானி, ஆசியா, இந்தியாவின் ‘நம்பர் 1’ பணக்காரராக நீடிக்கிறார். இருந்தபோதும் அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி தொடர்ந்தால், அவர் ஆசிய அளவில் முதலிடத்தை இழக்கக்கூடும். இந்திய அளவில் அதானிக்கு 2-வது இடத்தில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி உள்ளார். இருவருக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 4 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.