மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்களல்ல – பேராயர் இல்லம்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் சிறை செல்வார். ஊடகங்களில் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து அவரால் தப்பி விட முடியாது என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு தாக்குதல்களும் முன்னரே அறிவிக்கப்பட்டவையல்ல. அதன் அடிப்படையில் அவற்றுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சமப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நேற்று தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் , ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அருட்தந்தை இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த 30 ஆண்டுகளாக வடக்கில் நிலவிய யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தில் இடம்பெற்றவற்றையும் , இதனையும் சமப்படுத்த முடியாது என்பதை முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் அறியவில்லையா?
யுத்த காலத்தில் பயங்கரவாதிகள் தமது எதிர்தரப்பினர் மீது தாக்குதல்களை மேற்கொள்வர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையிலும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் யுத்த காலத்தில் இவ்வாறு முன்னரே அறிவிக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இவ்விரண்டையும் தொடர்புபடுத்த முடியாது. தாக்குதல் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தும் அது தொடர்பில் அறிவிக்காமையே இங்கு இழைக்கப்பட்ட பாரிய குற்றமாகும்.
தனக்கு கீழ் செயற்பட்ட அதிகாரிகளின் தவறால் தான் அவருக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பினை நன்றாக பார்க்குமாறு அவரிடம் வலியுறுத்துகின்றோம். தீர்ப்பு ஆங்கில மொழியில் காணப்பட்டமையால் அவர் அதனை சரியாக புரிந்து கொள்ளவில்லை போலும்.
அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு அறிவிக்கவில்லை என்றால் , அதற்கான சூழலை ஏற்படுத்தாமலிருந்தது ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் இழைத்த தவறாகும் என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு ஜனாதிபதியும் வெளிநாடு செல்லும் போது பதில் ஜனாதிபதியொருவரை அல்லது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமித்துச் செல்ல வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவர் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமையும் தவறாகும். நாட்டில் பல மாதங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை. அரச தலைவர் என்ற ரீதியில் தேசிய பொறுப்பினை அவர் தட்டிக்கழித்துள்ளமையும் பெருந்தவறாகும்.
அவரது இந்த தட்டிக்கழிப்பினால் 270 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. பலர் அங்கவீனமுற்றவர்களாகியுள்ளனர். பலர் தமது உறவினர்களை இழந்துள்ளனர். எனவே இதனை சாதாரணமானதாகக் கருத முடியாது. இவை அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதிமன்ற தீர்ப்பினை அறியாமல் ஊடகங்கள் முன்னிலையில் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்.
கத்தோலிக்க அருட்தந்தைகள் இந்த தீர்ப்பினை நன்றாக படித்தறிந்து கொண்டுள்ளனர். எனவே எம்மிடம் பொய்யுரைக்க வர வேண்டாம். கத்தோலிக்க மக்கள் அவரை அன்புடன் வரவேற்பதாகக் கூறுவதும் முற்றிலும் பொய்யாகும். கொச்சிக்கடை பிரதேசத்திற்குச் சென்றால் மக்கள் அவரை எவ்வாறு வரவேற்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இறைவனுக்காக மன்னிப்பு கோருவதாகக் கூறும் அவர் இறைவனின் பிரதிநிதி அல்ல. கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. உண்மையில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருந்தால் , தாக்குதல்கள் இடம்பெற்ற அன்றைய தினமே மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் என்பதோடு மாத்திரமின்றி , ஜனாதிபதி பதவியிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். மாறாக தற்போது வசனத்தினால் மன்னிப்பு கோருவதால் மாத்திரம் எம்மை ஏமாற்றிவிட முடியாது.
நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியமைக்காக அவர் முழு இலங்கையர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும். மாறாக ஊடகங்களில் அவர் மன்னிப்பு கோருவதால் அனைத்தும் வழமைக்கு திரும்பப் போவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் படி நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு தன்னிடம் வசதியில்லை என்று அவர் பொய் கூறினாலும் , அவரிடமுள்ள சொத்து விபரங்களை நாம் அறிவோம். தேர்தல் அண்மித்துள்ளமையின் காரணமாகவே அவருக்கு கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தோன்றியுள்ளது.
இதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எண்ண வேண்டாம். எமது மக்கள் அவருக்கு வாக்களிக்கும் வகையில் முட்டாள்கள் அல்ல. தேர்தல் முடிவுகளின் பின்னர் அவர் அதனை உணர்ந்து கொள்வார். தெரிந்தே இழைத்த தவறுக்காக அவர் நிச்சயம் சிறை செல்வார்.
அதிலிருந்து ஒருபோதும் அவரால் தப்பிக்க முடியாது. அரசியல் ரீதியில் அவர் தோல்வியடைந்தவராவார். அவரது உறவினர்கள் கூட உதவ முன்வராத நிலைமையிலேயே அவர் காணப்படுகின்றார். இவ்வாறானவரால் எவ்வாறு அடுத்த ஜனாதிபதியாக முடியும்? ஜனாதிபதி மாத்திரமல்ல , அவர் அதற்கு முன்னர் கிராம உத்தியோகத்தராகக் கூட ஆக முடியாது என்றார்.
இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு இழப்பீடு கொடுப்பது போதுமா? பாதிக்கப்பட்டோர் நினைப்பது என்ன?
‘பயங்கரவாதி போல பார்க்கிறார்கள்’ – ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள்!!
என்னை விமர்சிப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு தார்மீக உரிமை கிடையாது – மைத்திரிபால!!