ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் உக்ரைனின் மற்றுமொரு கிராமம் – தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய இராணுவம்!
உக்ரைன் – ரஷ்ய யுத்தம் உக்கிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் பாக்முட் நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.
வான்வழிப் படையினரின் தாக்குதலின் உதவியுடன் குறித்த கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சிகளை ரஷ்ய இராணுவம் தீவிரப்படுத்தி வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 75 ஆயிரம் சனத்தொகையைக் கொண்ட பாக்முட் நகரை ரஷ்யா கைப்பற்றினால், அது ரஷ்யாவின் முக்கிய போர் வெற்றியாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, பாக்முட் மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் சிறுவன் உட்பட இரண்டு பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் குறித்த பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சுமார் 400 பேர் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள கிளிஷ்சிவ்கா கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இதேவேளை, கடந்தவாரம் உக்ரைனின் வுஹ்லேடரின் பகுதியை ரஷ்யா கைப்பற்றியதாக கூறினாலும், உக்ரைன் இராணுவம் அதனை முறியடித்துள்ளதாக கூறியுள்ளது.