;
Athirady Tamil News

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும் – சரத் வீரசேகரவின் குழு மகாசங்கத்தினரிடம் எடுத்துரைப்பு!!

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம் பெறும்.

அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணைக்கு அமையவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட வேண்டும்.

ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கு மகாசங்கத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனையை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு அமைய அரசியலமைப்பை செயற்படுத்த முடியாது.13 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களின் நிலைப்பாட்டை தெரிந்துக் கொண்டு அதன்படி செயற்பட வேண்டும் என்பதை அரச தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் 13 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யாஹம்பத்,அட்மிரல் சமர் வீரசேகர உட்பட தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம்,ஸ்ரீ லங்கா ராமன்ய நிகாய மற்றும் ஸ்ரீ லங்கா அமரபுரம் ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கை மக்களின் விருப்பத்திற்கு அமைய நிறைவேற்றப்பட்டது அல்ல,1987 ஆம் ஆண்டு நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்ட போது ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இந்தியாவினால் பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினால் நாடு 09 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.நிலப்பரப்பில் சிறிய நாடான இலங்கைக்கு 09 நிர்வாக அலகுகள் அவசியமற்றது.

13 ஆவது திருத்தத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் ஊடாக தடை விதிக்கப்பட்டதால் நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.விடுதலை புலிகள் அமைப்பு இலங்கையில் இருந்து மாத்திரம் தான் ஒழிக்கப்பட்டுள்ளது,புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் விடுதலை புலிகள் சர்வதேச மட்டத்தில் பலமான முறையில் செயற்படுகிறார்கள்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் 09 மாகாணங்களுக்கு 09 பொலிஸ்மா அதிபர்கள்,இவர்கள் மாகாண முதலமைச்சரனால் நியமிக்கப்படுவார்கள்,முதலமைச்சர்கள் அரசியல்வாதிகள் ஆகவே பொலிஸ் மா அதிபர்கள் அரசியல்வாதிகளினால் நேரடியாக நியமிக்கும் போது நாட்டின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படும்.

1987 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை,ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாட்டில் தேவையிலாத பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்பட்டால் நாட்டில் சிங்கள- தமிழ் இனகலவரம் மீண்டும் தோற்றம் பெறும்.

அரசியலமைப்பை திருத்தம் செய்யவோ,13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராகவே 69 இலட்ச மக்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது.அவர் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.நாட்டை பிளவுப்படுத்தும் கொள்கைக்கு எதிரான கொள்கைக்கு அமையவே அந்த 134 உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தார்கள்,ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோட்டபய ராஜபக்ஷவின் மக்களாணைக்கு அமைய செயற்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமற்றது.புதிய அரசியலமைப்பிற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது,ஆகவே புதிய அரசியலமைப்பை உருவாக்கி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்ய மகாசங்கத்தினர் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் யோசனையை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு அமைய அரசியலமைப்பை செயற்படுத்த முடியாது.

13 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களின் நிலைப்பாட்டை தெரிந்துக் கொண்டு.அதன்படி செயற்பட வேண்டும் என்பதை அரச தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் 13 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என மகாசங்கத்தினர் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.