யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல பொதுஜன பெரமுன முயற்சி – டலஸ்!!
யானையின் வாலை பிடித்து சொர்க்கம் செல்ல முயற்சிக்கும் பொதுஜன பெரமுனவின் முடிவு மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்தப்படும்.
உள்ளூராட்சிமன்ற பெறுபேற்றை கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை கௌரவமான முறையில் கலைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுத்த அனைத்து சூழ்ச்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுதந்திர மக்கள் முன்னணி நாடளாவிய ரீதியில் 207 உள்ளூர் அதிகார சபைகளில் போட்டியிடும். வெற்றி,தோல்வியை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையிலும்,தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்ற கூட்டத்தொரை ஆரம்பித்து வைத்தார்.மூன்றாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவுப் பெற்ற நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஏன் அவசரமாக ஒத்திவைக்கப்பட்டது என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
யானையின் வாலை பிடித்து சொர்க்கம் செல்ல முயற்சிக்கும் பொதுஜன பெரமுனவின் முடிவு எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்தப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கு மக்களாணை கிடையாது என்பது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக உறுதிப்படுத்தப்படும்.
பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது.
தவறான அரசியல் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவுடன் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்படும்.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேற்றை கொண்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கௌரவமான முறையில் கலைக்க வேண்டும் என்றார்.